கிழக்கு மாகாணத்தின் கல்விச்செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகளை தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


கிழக்கு மாகாணத்தின் கல்விச்செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகளை தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆசிரியர் நியமன கொள்கைகளுக்கு மாறாக கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகளை ஆசிரியர் நியமனங்களுக்குள் உள்வாங்கப்படுவதாகவும் இது எதிர்காலத்தில் கிழக்கின் கல்வி நிலையினை பாதிக்கும் நிலையேற்படும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொதுசெயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் தெரிவித்தார்.நேற்று(23) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,அண்மையில் வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் கிழக்கு மாகாணத்தில் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இலங்கையில் வெளியிடப்பட்ட இலங்கை ஆசிரியர் பிரமாணக் குறிப்பிற்கு அமைவாக இந்த நியமனங்கள் வழங்கப்படவில்லை. இந்த நியமனங்கள் கிழக்கு மாகாணத்தில் அரசியல் ரீதியான பின்புலத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது. 

இதற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற சில வலயக்கல்விப் பணிப்பாளர்களும் உடந்தைகளாக இருக்கின்றார்கள். சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் வியாழேந்திரன் அவர்களும் முன்னின்று அவர்களுக்கிடையில் போட்டியிட்டு சிபாரிசுகளை செய்துகொண்டிருக்கின்றார்கள்.கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் ஏராளமான கணித, விஞ்ஞான, ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. இந்த ஆசிரியர் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு கிழக்குமாகாணசபைக்கு அதிகாரம் உள்ளது. இவர்களை ஆசிரியர் சேவைக்குள் இணைப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநருக்கு அழுத்தத்தை கொடுத்து இவ்வாறான நியமிப்புகளை அவர்கள் செய்ய வேண்டும். வர்த்தமானி மூலம் அறிவித்து இந்த ஆசிரியர் நியமனங்களை வழங்க முன்வரவேண்டும். 

அதை விடுத்து வேலையற்ற பட்டதாரிகளைக்கொண்டு ஆசிரியர் நியமனம் என்ற போலிப் பிரசாரத்தை முன்னெடுத்துவருகின்றனர்.இவர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கவேண்டுமானால் இலங்கை ஆசிரியர் பிரமாணக் குறிப்பில் சொல்லப்பட்டதற்கிணங்க ஒரு போட்டிப் பரீட்சையின் மூலமாகவோ ஒரு நேர்முகப் பரீட்சையின் மூலமாகவோ தான் நியமிப்பு செய்ய முடியும். மிகக் குறைவான ஒரு சம்பளத்தில் இந்த நியமனமானது கிழக்கு மாகாணத்தில் தரமான கல்வியினை பின்னடைவான நிலைக்கு கொண்டு செல்வதனை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. 

இலங்கை ஆசிரியர் பிரமாணக் குறிப்பில் சொல்லப்பட்டதன் பிரகாரம் 35வயதிற்கு உட்பட்டவர்கள் தான் ஆசிரியர் சேவையில் இணைய முடியும். அப்படியிருக்கின்ற போது இந்த நியமனமானது அவர்களுக்கு பிற்காலத்தில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தும்.இந்த இரண்டு அரசியல்வாதிகளும் இந்த நியமனத்தை வழங்குவதற்கு முன் கிழக்கு மாகாண ஆளுநரையும் இங்குள்ள ஆளணி வெற்றிடத்தையும் மையமாக வைத்துக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கும் இங்குள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கும் முன்வரவேண்டும்.தேசிய பாடசாலைகளை தரமுயர்த்துவது கொள்கை ரீதியாக 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 03ஃ2020 சுற்றுநிருபத்திற்கமைய சட்டரீதியாக வலயக்கல்விப் பணிப்பாளரோ மாகாணக் கல்விப் பணிப்பாளரோ சிபாரிசு செய்து பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு கல்வி அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு பாடசாலைகளை தெரிவு செய்திருக்கின்றது. ஆனால் அண்மைக் காலத்தில் ஏழு பாடசாலைகளை தான் தான் சிபாரிசு செய்ததாக கூறி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அவர்கள் அந்த ஏழு பாடசாலைகளினதும் திறப்பு விழாவிற்கு சென்றிருக்கின்றார்.தேசிய பாடசாலையாக தரமுயர்த்தவேண்டுமானால் தேசிய பாடசாலைக்கும் மாகாண பாடசாலைகளுக்கும் இடையில் மாகாணப பணிப்பாளரே இணைப்பாளராக இருக்கின்றார். 

ஆனால் மாகாணப் பணிப்பாளரது அதிகாரமும் இல்லாமல் வியாழேந்திரன் அவர்கள் அத்துமீறி இவ்வாறான செயற்பாடுகளைச் செய்கின்றார்.யுத்தத்திற்குப் பின்னர் கிழக்கு மாகாணமானது கல்வித்துறையில் ஏராளமான செயற்பாடுகளை செய்யவேண்டியிருக்கின்றது. கிராம அபிவிருத்தி என்று கூறப்படுகின்றபோது அவர் பிரகடனப்படுத்துகின்ற ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயம் கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்பதற்கு இரண்டாம் நிலை ஆய்வுகூடங்கள்கூடஇல்லை. உயர்தரம் கற்கின்ற பிள்ளைகள் கூட அங்கிருக்கின்றனர். 1C பாடசாலையாகும். வியாழேந்திரன் அவர்கள் கல்வி கற்ற பாடசாலைதான் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயமாகும். ஆனால் அங்கு ஒரு இரண்டாம் நிலை ஆய்வுகூடம் கூட இல்லை. ஏறாவூர்பற்றின் நிலைமை மிக மோசமாக இருக்கின்றபோது இதையெல்லாம் விட்டுவிட்டு தேசிய பாடசாலைகளை தான்தான் தரமுயர்த்துவதாக வியாழேந்திரன் அவர்கள் சொல்வதை எமது சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. இதனை அரசியல்மயப்படுத்த வேண்டாமென கேட்டுக்கொள்கின்றது.மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்தில் இவர்கள் இருவருக்கும் இடையிலான போட்டி காரணமாக மாறிமாறி இவர்கள் கல்வி சம்பந்தமான விடயங்களை வலயக்கல்விப் பணிப்பாளரினூடாக நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். 


இந்த மாதம் 11ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட முதல்நாளே வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கு ஏராளமான வேலைகள் இருந்தன. டெங்கு பிரச்சினை, கடுமையான மழை,கொரொனா என பலவித பிரச்சினைகள் காணப்பட்டன. 

11ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர்களை அழைத்து சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கல்வி அபிவிருத்தி என்ற ஒரு கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றார். சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கும் வியாழேந்திரன் அவர்களுக்கும் இடையில் கல்வி அபிவிருத்தி விடயத்தில் கடுமையான போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதற்கு சிறிது காலத்திற்கு முன்னர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் காரியாலயத்தில் நான்கு தேசியப் பாடசாலைகளின் அதிபர்களை அழைத்து கல்வி அபிவிருத்தி என்ற பெயரில் வலயக்கல்விப் பணிப்பாளர்களின் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றிருந்தது. கல்வி அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பது அந்த தகவல்களை வலயக்கல்விப் பணிப்பாளரூடாக மாகாணக்கல்விப் பணிப்பாளரூடாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்து தகவல்களை பெறவேண்டுமே தவிர தகவல்களை பெறுவதற்காக அரசியல்ரீதியான கூட்டங்களை நடத்துவதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.யுத்தத்திற்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலையை உயர்த்துவது என்பதையே ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில்கூட சொல்லப்பட்டிருக்கின்றது.

கல்வியை வளர்க்கவேண்டியவர்களே அரசியல் போட்டி காரணமாக கல்வியை அரசியல்மயமாக்கிக்கொண்டு இருக்கின்றார்கள்.மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து வலயங்கள் காணப்படுகின்றன. இந்த ஐந்து வலயங்களில் வலய கல்விப்பணிப்பாளர்கள் நேர்முகப்பரீட்சையூடாக நியமிக்கப்பட்டிருந்தனர்.ஆனால் ஒரு கல்வி வலயத்தில் எந்தவித சட்ட ரீதியான நடவடிக்கையும் இல்லாமல் அரசியல் ரீதியாக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் நியமன பிரமானத்திற்கு மாறாக சேவை மூப்பின் அடிப்படையில் வலய கல்விப்பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஆனால் மட்டக்களப்பில் சேவை மூப்பில் இருந்த வலய கல்விப்பணிப்பாளரை அனுப்பிவிட்டு சேவை மூப்புக்கு குறைந்தவர் பதில் வலய கல்விப்பணிப்பாளராக இருக்கின்றார்.இந்த கல்வி பணிப்பாளர் தொடர்ச்சியான அரசியல் ரீதியான செயற்பாட்டினையே மேற்கொண்டுவருகின்றார்.

இவர் கல்குடா வலயத்தில் பிரதிக்கல்விப்பணிப்பாளராக இருந்த காலத்தில் அங்கு கல்வி மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது.அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அங்கு கல்வி முன்னேற்றங்கள் காணப்படுகின்றன.இன்று கல்வி நிலைமை தொடர்பில் அச்சநிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.சிலர் கல்வி என்ற போர்வையில் தமது அரசியலையும் நியமனங்களையும் செய்வதன் காரணமாக கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலைமை மிகவும் பின்னடையும் நிலையேற்படலாம்.பட்டிருப்பு கல்வி வலய கல்விப்பணிப்பாளர் 15வருடத்திற்கு மேலாக அங்கு வலய கல்விப்பணிப்பாளராக இருக்கின்றார்.அவருக்கு கிழக்கு மாகாண இடமாற்ற கொள்கைக்கு அமைவாக வழங்கப்பட்ட இடமாற்றத்தினை மீறி அவர் திருக்கோவில் வலயத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் பட்டிருப்பு வலயத்திற்கு வந்து வலய கல்வி பணிப்பாளராக இருந்துகொண்டுள்ள நிலையில் இதுவரையில் ஒரு முன்னேற்றம் இல்லாத வலயமாக பட்டிருப்பு வலயம் காணப்படுகின்றது. 


வலயம் இம்முறை இலங்கையில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 89வது இடமாகவுள்ளது.இலங்கையில் 99வலயம் உள்ள நிலையில் அனைத்து வளங்களையும் கொண் பட்டிருப்பு கல்வி வலயம் 89வது இடத்திற்கு வந்துள்ளது.இவரும் பழையபடி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றார்.இதனை எமது இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.யுத்ததிற்கு பின்னர் எமது கல்வியை வளர்க்கவேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.இங்குள்ள பெரும்பாலான கல்விப்பணிப்பாளர்கள் அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாகவே செயற்படுகின்றனர்.இவ்வாறான கைக்கூலிகள் வெளியேற்றப்பட்டு சிறந்த நிர்வாகத்திறமைகொண்ட சட்டதிட்டங்களுக்கு ஏற்ப வலய கல்விப்பணிப்பாளர்கள் நியமனம் செய்யப்படவேண்டும்.

Reactions

Post a Comment

0 Comments