மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுருவின் வீட்டில் இன்று கொள்ளையிடப்பட்டுள்ளது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள ஆலயத்தின் பிரதம குருவின் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து இந்த கொள்ளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை 10.00மணிக்கும் பகல் 01.00மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த கொள்ளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாமாங்கேஸ்ரர் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
பிரதமகுருக்களின் வீட்டில் யாரும் இல்லாதவேளையில் வீட்டின் பின்கதவினை உடைத்து வீட்டில் இருந்த தங்கம் மற்றும் காசுகளை கொள்ளையர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளதாகவும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதன்போது சுமார் ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளும் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
0 Comments